வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 மார்ச், 2010

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்படுகிறதா? இல்லையா? : ஐ.தே.மு. கேள்வி

Loogix.com. Animated avatars. Explosion ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் இலங்கையின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்ற அரசாங்கம் தூதுக் குழுக்களை அனுப்பி அங்கு பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்படுகின்றதா? இல்லையா? என்பதை மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசியத்துக்கு ஒன்றையும் சர்வதேசத்துக்கு மற்றொன்றையும் கூறி பொது மக்களை முட்டாள்களாக்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது. இதனை நிறுத்திக் கொள்வதுடன் நேர்மையாக நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசிய முன்னணியின் கேகாலை மாவட்ட வேட்பாளர் கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் எமது நாட்டின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது. அதனால் அவ்வாறான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது என்றும் கூறி வந்தது.
அது மட்டுமல்லாது மேற்படி வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் எமது நாட்டின் ஆடைத் தொழில், அதன் உற்பத்தி உள்ளிட்ட விடயங்களில் எந்தவித பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தது.
இப்படி இருக்கையிலேயே ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் நான்கு அமைச்சர்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பதாக அனுப்பி வைத்தது. அத்துடன், மதத் தலைவர்களும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் எமது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை அல்லது அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையுமானால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள் அவசியமற்றவையாகும். இருப்பினும் மீண்டும் ஒரு குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்படியானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்படுகின்றதா என்பதைக் கூற வேண்டும்.
சர்வதேசம் தொடர்பில் மக்களிடத்தில் சென்று சண்டித்தனமான கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், சர்வதேசத்திடம் வேறு விதமாக பேசப்படுகின்றது. இந்த இரட்டை வேடம் அர்த்தமற்றது.
யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகவிருக்கின்ற நிலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனாலும் வாக்குறுதிகளை மாத்திரம் அரசாங்கம் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது.
மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்த மட்டில் தேர்தல் காலங்களில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அங்கு சட்டம் இருக்கின்றது. அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கின்றது. இவ்வாறான சட்டங்கள் இலங்கையில் இருந்திருப்பின் ஒட்டுமொத்த அரசாங்கமும் இன்று சிறையில்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் எதனையும் அரசு நிறைவேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், தற்போது மேலும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது.
இவையனைத்தும் பொய்யானவை. மக்களை ஏமாற்றுவதற்கான மாயைகளாகவே இவை அமைந்துள்ளன" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’