கடந்த காலங்களில் ஐ.தே.க., ஐ.ம.கூ. ஆகியனவே தமிழ் மக்களைக் கொன்றனரே அன்றி ஜேவிபி அல்ல என்று சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உள்ள உடுப்பிட்டியில் ஜே.வி.பி. கட்சியினர் தமது கிளைக் காரியாலயத்தை நேற்று திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வு நேற்று கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், தற்போதைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தன.
எனினும் ஜே.வி.பி. இதுவரையில் ஒரு தமிழரையேனும் கொலை செய்யவில்லை. தற்போது அழைக்கப்பட்டு வருவது போல, ஜே.வி.பி. ஒன்றும் இனவாத கட்சி அல்ல.
கடந்த 1983ஆம் ஆண்டு, ரோஹன விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. செயல்பட்ட போது, யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கட்சிக் காரியாலயங்களைக் கொண்டிருந்தது.
அதனையடுத்து சுமார் 27 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் தனது கிளைக் காரியாலயத்தை ஆரம்பிக்கிறது" என்றார்.
மேற்படிக் கூட்டத்தின் போது, வெறும் 40க்கும் குறைவான மக்களே வருகை தந்திருந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்களின் உறவினர்களே என்றும் கூறப்படுகிறது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’