வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 பிப்ரவரி, 2010

நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் : அனோமா பொன்சேகா


ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

நீதி கிடைக்க வேண்டுமாயின் கடவுளிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டைக் கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தான் எனது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா. அவரை இன்று அரசியலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்காகப் பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரது விடுதலைக்காக சட்டத்துடன் போராடும் அதேசமயம், ஆலயங்களை நாடி பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதைத் தவிர வேறு வழி கிடையாது. ஏனென்றால் இன்று இலங்கையில் மிக மோசமான குடும்ப ஆட்சி மேலோங்கியுள்ளது" என்றார்.

இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் கூறுகையில்,

"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது காணப்படும் வன்முறைச் சூழலில் பாதுகாப்புகள் பறிக்கப்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது.

ஆனால், அரசாங்க வேட்பாளர்களுக்குச் சகல பாதுகாப்புகளும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான நிலையாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் ஜனநாயக முறையில் நடைபெறாது. எதிர்க்கட்சிகள் மிக மோசமான வன்முறைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’