-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வியாழன், 25 பிப்ரவரி, 2010
வன்முறையாளர்களுக்கும் பிரிவினையாளர்களுக்கும் தருகிற ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களது பிரச்சினை தீரும்!
‘துக்ளக்’ ஆசிரிய தலையங்கம்!!
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து, தமிழகத்தில் வெளியாகும் பிரபல அரசியல் விமர்சன வார இதழான ‘துக்ளக்’ தனது 10-2-2010 இதழில் நீண்ட தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள் யதார்த்தபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் இருப்பதால், எமது தேனீ வாசகர்களும் அவற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு, அதை அப்படியே இங்கே தந்துள்ளோம்.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுவாகத் தமிழகப் பத்திரிகைகளிடம் ஒரு மாதிரியான விரக்தியைத் தோற்றுவித்திருக்கின்றது. ராஜபக்ஸவைத் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள், (தமிழ்க்கட்சியும், தீவிர சிங்களக் கட்சியும் உட்பட) இணைந்து, முன்னாள் ராணுவத் தளபதியை பொது வேட்பாளராக நிறுத்திய நேரத்திலிருந்து – தமிழகப் பத்திரிகைகளிடையே ஒரு பரபரப்பு உண்டானது. இதுவரை இலங்கைத் தேர்தலைப் பற்றி, இங்கு காணப்படாத உற்சாகம் இப்போது தோன்றியது.
விடுதலைப் புலிகளை வீழ்த்தி, அவர்களுடைய தலைவரின் வாழ்வையும் முடித்து வைத்த ஆட்சியின் தலைவர் என்பதால், தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களுக்கும், ஈழப் பிரச்சாரகர்களுக்கும், தமிழ் ‘இன’ உணர்வாளர்களுக்கும், ராஜபக்ஸ மீது ஒரு விசேட வெறுப்பு உண்டாகிவிட்டது. இவர்களில் பலர் தமிழ்ப் பத்திரிகை உலகத் தொடர்புகள் மிக்கவர்கள், இதனால் இவர்களுடைய வெறுப்பு, பத்திரிகை உலகிற்கும் பரவியது. தமிழ் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு, இரு வகைப்பட்டது.
ஒன்று – உண்மையிலேயே, ராஜபக்ஸ தமிழர் விரோதி என்று நம்பிய வகை, மற்றொன்று ராஜபக்ஸவை மிக மோசமாகச் சித்தரிப்பது பத்திரிகை வியாபாரத்திற்கு உதவும் என்று நம்பிய வகை. இப்படித் தமிழ் பத்திரிகைகள் பல, ‘ராஜபக்ஸ வீழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்’ என்ற கருத்துக்களையும், அதற்கேற்ப செய்திகளையும் வெளியிட, இது சில ஆங்கிலப் பத்திரிகைகளையும் (‘ஹிந்து’ பத்திரிகை அல்ல) பாதித்தது. இவ்வாறாக, இங்கு ‘இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்ஸ தோல்வி காணக் கூடும்’ என்ற கருத்து பரவத் தொடங்கி, இறுதிக் கட்டங்களில் ‘பொன்சேகா வெற்றி பெறுவார்’ என்ற அபிப்பிராயம் கூட தோன்ற ஆரம்பித்து விட்டது. குறைந்த பட்சம் ‘கடும் போட்டி’ நடந்து, தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவில்தான் ராஜபக்ஸ வெற்றி பெறமுடியும் - என்று பலரும் நம்பி விட்டனர்.
இதற்கு நேர்மாறாகத் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. ராஜபக்ஸ மிக வசதியாகவே வென்றிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் நின்று ஆதரவு தெரிவித்தும் கூட, பொன்சேகா மிகவும் பின்தங்கித் தோற்றிருக்கிறார். இங்கு அனாவசியமாக ஃபொன்சேகாவை சுவீகாரம் எடுத்துக் கொண்ட பத்திரிகைகள், ராஜபக்ஸ வெற்றியைப் பற்றி சந்தேகத்தைக் கிளப்ப முயற்சிக்க, அதுவும் எடுபடாமல் போகவே, இலங்கைத் தேர்தல் முடிவு பற்றி ஒரு விரக்திப் பார்வை இங்கே தெரிகிறது.
இது சிறிதும் தேவையற்றது. ராஜபக்ஸாவாகட்டும், பொன்சேகாவாகட்டும், அதிபர் பதவிக்கு வந்திருக்கக் கூடிய வேறு ஒருவராகட்டும் - சிங்களவர் ஓட்டு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது, இந்த நிலைமையில் அவர்கள் யாராயினும் சரி, தாங்களாகவே முன்வந்து தமிழர்களின் நலனை மிகத் தீவிரமாக அணுகிவிட மாட்டார்கள். ஆகையால், ‘இலங்கையில் இவர் ஜெயித்தால் தமிழர்களுக்கு தோல்வி’ – ‘இவர் ஜெயித்தால் தமிழர்களுக்கு உபயோகம்’ என்று சொல்லக் கூடிய சிங்கள அரசியல்வாதி எவரும் இருக்க முடியாது.
பொன்சேகாவே வெற்றி பெற்றிருந்தால் கூட, அவரை ஆதரிக்கின்ற சிங்கள எதிர்க்கட்சியான ஜனதா விமுத்தி பெரமுனா – அவரை ‘தமிழர் நலன் விரும்பி’யாகச் செயல்பட விட்டிருக்குமா? அவர்தான் அப்படி செயல்பட முனைந்திருப்பாரா? தமிழர்களுக்கு எதிராக அவர் முன்பு பேசியதை எல்லாம், ஒரேயடியாக மறந்துவிடத் தயாராக இருந்தால்தான் - அவரை ‘தமிழர் நலன் விரும்பி’யாக நாம் நினைக்க முடியும். தன்னுடைய ராணுவத் தலைமை பற்றிய ஒரு மிக உயர்ந்த அபிப்பிராயம், திடீர் அரசியல் ஆசை, எதிர்க் கட்சிகளின் ஆதரவினால் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியும் என்ற ஒரு அதீத கற்பனை, வாய்க்கு வந்த வாக்குறுதிகள்ஸ போன்றவற்றைத் தவிர, வேறு எதையும் அவரிடம் பெரிதாகக் காண முடியவில்லை.
இப்பேர்ப்பட்டவரை, சிங்கள எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தாங்களும் ஆதரிக்க விடுதலைப்புலி ஆதரவு முன்னணியும் முன்வந்தது, ஒரு மிகத் தவறான அணுகுமுறை. அந்தப் புலி ஆதரவு முன்னணியில் உள்ள பலர், தமிழகத்தில் உள்ள தமிழ் பத்திரிகை உலகத் தொடர்பு உள்ளவர்கள் என்பதால், அவர்களும் தமிழகப் பத்திரிகைகளும், ஒத்த கருத்து உடையவர்களாக ‘பொன்சேகா வெற்றி – தமிழர் நல்வாழ்வு’ என்று நம்பி, பிரச்சாரமும் செய்து, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டனர். இது பரவாயில்லை, இதனுடைய ஒரு விரும்பத் தகாத விளைவு இலங்கைத் தமிழர்களிடையே ஏறபட்டது. ராஜபக்ஸ தோல்வி நமக்கு நல்லது – என்று இலங்கைத் தமிழர்கள் தீர்மானித்ததால், தமிழர் பகுதிகளில், பொன்சேகா பெரும் ஆதரவு பெற்றார். தமிழர் பகுதிகளில் குறைந்த அளவு வாக்குப் பதிவு நடந்திருந்தாலும், அது ராஜபக்ஸவிற்கு எதிராகவே அமைந்தது. (அத்தனை வாக்காளர்களும், அவருக்கு வாக்களித்திருந்தால் கூட அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது – என்பது வேறு விடயம்)
இப்போது, இந்த ராஜபக்ஸ எதிர்ப்பிற்காக, தமிழர் பகுதிகளில் வருத்தம் தோன்றியிருப்பதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் செய்தி கூறுகின்றது. அவர்களின் பிரதிநிதி ஒருவர், ‘பொன்சேகாதான் வெற்றி பெறப் போகிறாh என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி அவருக்கே வாக்களித்தோம். இதைவிடப் பேசாமல், ஓட்டளிக்காமல், தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். இப்போது ராஜபக்ஸவிற்கு தமிழர்கள் மீது கோபம்தான் வரும்’ என்று கூறியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களிடையே இந்த அபிப்பிராயம் எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இந்த அபிப்பிராயத்தில் கூறப்பட்டுள்ளது போல, தமிழர்கள் தனக்கு எதிராக வாக்களித்தனர் என்பதற்காக, அவர்கள் மீது கோபம் கொண்டு, அவர்களுடைய நலன்களைப் புறக்கணிக்க ராஜபக்ஸ முனைந்தால், அது ‘அவர் வகிக்கிற பதவிக்கு அருகதையற்றவர்’ என்பதைத்தான் காட்டும். சிங்களவர்களில் கூட, சுமார் 30 சதவிகிதத்தினர், ராஜபக்ஸவிற்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் நலனைப் புறக்கணிக்க ராஜபக்ஸ முற்படுவாரா? இதுதான் ஒரு தேர்தலின் விளைவு என்றால் - ஜனநாயக முறையே அர்த்தமற்றதாகிவிடும்.
சொல்லப் போனால், தமிழர் நலன் பற்றி விசேட கவனம் செலுத்துவது, தனக்கு இப்போது அரசியல் ரீதியாகக் கூட மிகவும் அவசியமாகி இருக்கிறது என்பதை ராஜபக்ஸ உணர வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் இனிதான் நடைபெற வேண்டும். விலைவாசி, சட்டம் - ஒழுங்கு, ஊழல், உறவினர்களை முன்னேற்றுதல்ஸ என்ற பல விவகாரங்கள் மக்கள் முன் பெரிதாக நிற்கிறபோது, சிங்களவர்களின் ஓட்டுக்கள் ராஜபக்ஸவிற்கு கொத்தாக விழும் நிலை மாறும், அப்போது தமிழர்கள் போடக் கூடிய ஓட்டுக்களும் அவருக்கத் தேவைப்படும்.
அது மட்டுமல்ல, சிங்களவர்களுக்கு நிகராகத் தமிழர்களும் உரிமைகளைப் பெறவும், சமஸ்டி அமைப்பு வழியில் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவும், தமிழர்கள் அமைதியுடன் வாழ்ந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் வழி செய்யப்படுவது சிங்களவர்களுக்குக் கூட நல்லது. ஏனெனில், தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டால், தமிழர்களிடையே தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கும்.
விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டதால், தீவிரவாதம் அழிந்து விட்டது என்று இலங்கை அரசு நினைத்து விட முடியாது. தங்களை ஒரு ராணுவப் படை’ என நினைத்துக் கொண்டதால் – தங்களை மிஞ்சி செயல்பட்டு, இறுதியில் ஒரு சாரணர் (ஸ்கௌட்) குழு போன்ற சிங்கள ராணுவத்திடம் புலிகள் தோற்றுப் போனார்கள். ஆனால், தீவிரவாதிகளின் நாசவேலைகள் இப்படிப்பட்டதல்ல. அவற்றை எஞ்சியிருக்கும் புலிகளோ, அல்லது மற்ற சிலரோ மீண்டும் ஆரம்பிக்கலாம். அம்மாதிரி நிகழ்ந்தால், பொருட்சேதம், உயிர்ச் சேதம் மட்டுமின்றி, பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும். அம்மாதிரி நிலை தோன்றினால், அப்போது சிங்களவர்களே கூட, ‘ தமிழர்களுக்கு நியாயம் வழங்காதது அரசின் தவறு’ என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.
சிங்களவர்களும், தமிழர்களும் சம உரிமை பெற்று வாழ்கிறபோது, இலங்கை பெரும் பொருளாதார வளர்;ச்சியைக் காணும். மக்களுக்கும் - நாட்டிற்கும் - ஆட்சியாளர்களுக்கும் கூட அதுதான் நல்லது. சர்வதேச அமைப்புகளின் உதவியைப் பெறவும் அம்மாதிரி நிலை பெரிதும் உதவும். இதை உணர்ந்து ராஜபக்ஸ, இனியும் தமிழர்களின் பிரச்சினைகளைக் கவனிப்பதில் அலட்சியமாக இருந்துவிடாமல், தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை தன்னுடைய முதல் பணியாக ஏற்க வேண்டும்.
சிங்கள வெறியர்களும், ராஜபக்ஸவை அரசியல் ரீதியாக எதிர்க்கிற கட்சிகளும், இதை எதிர்க்கக் கூடும். இப்போது பெற்றிருக்கிற வெற்றிகளைப் பயன்படுத்தி, சர்வதேச உதவிகளைப் பெற்று, பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தைக் கண்டு, ஊழலைத் தவிர்த்துச் செயல்படுவதன் மூலம் ராஜபக்ஸ, இந்தச் சிங்கள வெறி மற்றும் சந்தர்ப்பவாத எதிர்ப்பை எளிதில் எதிர் கொண்டு விடலாம். இதற்கு இந்தியாவும் அவருக்கு உதவ முன்வர வேண்டும். அது மட்டுமின்றி, ‘தமிழர்களின் உரிமைகளை இன்னமும் இலங்கை புறக்கணிப்பது தொடர்ந்தால், அது இந்திய அதிருப்தியை முழுமையாகச் சம்பாதித்துத் தரும்’ என்பது இலங்கை அரசுக்கு உணர்த்தப்பட வேண்டும். ‘இலங்கை அரசுக்கு ராஜரீக ரீதியில் நெருக்குதல் ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதார ரீதியான உதவிகள் மறுபுறம்’ – என்று இருமுனை அணுகுமுறையைக் கடைப்பிடித்து - இலங்கையில் சமஸ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுவதற்கும், தமிழர்கள், சிங்களவர்களுக்கு சமமாக வாய்ப்புகள் பெறவும், இந்தியா வழி காண வேண்டும். இதைச் சாதிக்க கால அவகாசம் தேவைப்படும்., ஆனால், இதற்கான தொடக்கத்திற்கு விரைவாகவே வழி செய்ய முடியும்.
ராஜபக்ஸவைப் பொறுத்த வரையில், ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற முறையில், இந்திய – இலங்கை நட்புறவின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகவே இருப்பார். திடீர் அரசியல் ஆசை பற்றி விட்ட – பற்பல கட்சிகள் தயவில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்ட - பொன்சேகாவை விட, ராஜபக்ஸ, சர்வதேச கருத்து, இந்திய ராஜரீக நிர்ப்பந்தங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணரக் கூடியவராக இருப்பார் என்று எதிர்பார்க்க இடமிருக்கிறது.
ஆகையால், இலங்கையில் பொன்சேகாவின் தோல்வி, தமிழர்களின் தோல்வியாக வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் நடாத்தப்படுகிற நாடகக் காட்சிகள், தங்களைத் திசைதிருப்பி விடாமல், இலங்கைத் தமிழர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு நடக்கிற நாடகங்கள் ஒன்றா, இரண்டா? இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பத்தில் ஒரு சதவிகித துன்பமும் காணாத தமிழக புலி ஆதரவாளர்களின் - சவால்கள், ஒரு சில மணி நேரப் பிணைப்பைக் காட்டுகின்ற மனிதச் சங்கிலிகள், காலை உணவிற்கும் மாலை உணவிற்கும் இடையிலான உண்ணாவிரதத் தியாகங்கள் , இனப் பற்றுப் பேருரைகள், வீர சாகஸக் கட்டுரைகள் - போன்றவற்றினால் பாதிக்கப்படாமல், அநேகமாக அவை எல்லாமே தமிழகத்தில் செல்வாக்கு அல்லது வர்த்கம் ஆகியவற்றின பெருக்கத்திற்காகச் செய்யப்படுகிற ‘சாகஸங்களின் சங்கமம்’ என்பதை இலங்கைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வன்முறையாளர்களுக்கும், பிரிவினையாளர்களுக்கும் தருகிற நேர்முக மற்றும் மறைமுக ஆதரவுகளை இலங்கைத் தமிழர்கள் விலக்கிக் கொண்டால், அவர்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி தோன்ற ஆரம்பிக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’