வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர் முன்வந்துள்ளனர்-இராணுவப் பேச்சாளர்! // ஜெனரல் சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களில் ஒருவர் விடுதலை.. // ஆறுபேரிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள அனுமதி!

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர் முன்வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாட்சிகூற முன்வந்தவர்களிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுமதியளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சரத்பொன்சேகா அவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த மறுத்துள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாமீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இராணுவ சட்டங்களின்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஜெனரல் சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை குற்றத்தடுப்புப் பிரிவினர் உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோதே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை உயர்நீதிமன்றில் ஆஜர்படுத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான போதிய சாட்சியங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து குறித்த நபரை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் ஆதரவாளரான இந்நபர் அண்மையில் பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்கள் ஆறுபேரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இதன்படி ஜெனரல் சரத்பொன்சேகாவின் செயலாளர் சேனக்க டிசில்வா, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகியோரிடமும் மேலும் நான்கு பேரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த சந்தேகநபர்களை மார்ச் 26ம் திகதிவரை தடுத்து வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் சந்தேகநபர்கள் தரப்பிலிருந்து அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட போதிலும் அவசரகால சட்டத்தின்கீழ் அவர்களை தடுத்து வைத்திருக்க முடியுமென நீதவான் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’