வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 ஜனவரி, 2010

ஜனாதிபதித் தேர்தலில் குழப்பம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுடுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவு


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னிட்டு சகல மதுபானசாலைகளும் வாக்களிப்பு தினமான நாளையும் மறுநாள் 27ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலை நாளை செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் இன்று திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி காரியாலயங்கள் ஊடாகவே வாக்குப்பெட்டிகளும், ஏனைய ஆவணங்களும் அனுப்பிவைக்கப்படவிருகின்றன. தேர்தல் கடமைகளில் ஈடுபடவிருக்கின்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் வாக்காளர்களும் பயணிப்பதற்கென விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது குழப்பம் விளைவித்து வன்முறைகளில் ஈடுபடுவோரையும் தேர்தல் சட்டத்திட்டங்களை மதிக்காதோரையும் கண்ட இடத்தில் சுடுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை சகல பொலிஸ் பிரிவுகளிலும் அமுல் படுத்தி தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகளை தூண்டுவதற்கு முயற்சிப்போருக்கு முதலில் எச்சரிக்கை விடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யப்படும். எச்சரிக்கை வேட்டுக்களையும் மீறி அரசாங்க மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வாக்களிப்பு நிலையங்களிலும் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள்ளும் பொறுப்பற்ற விதங்களில் வன்முறைகளை தூண்டும் வகையில் நடத்துக்கொள்வோர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, மன்னார், கிளிநொச்சி, பதுளை ஆகிய மாவட்டங்களில் பணிகளில் ஈடுபடவிருக்கின்ற அதிகாரிகள் கடமைகளை பொறுப்பேற்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமையே சென்றுவிட்டனர். விசேட ரயில் போக்குவரத்து கொழும்பு கோட்டையிலிருந்து தெற்கு, மலையகம், கிழக்கு மற்றும் வவுனியாவிற்கும் நடத்தப்படும் என்றும் விசேட பஸ்கள் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்த மேற்குறிப்பிட்ட பிரதேசங்களுக்கும் தூர இடங்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

வாக்களிப்பதற்காக தலைநகர் உள்ளிட்ட ஏனைய நகரங்களிலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்வோர் மீண்டும் திரும்புவதற்காக இந்த விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று திணைக்களங்கள் அறிவித்துள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகிலிருக்கின்ற அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இன்று திங்கட்கிழமை செல்லவிருக்கின்றனர். மாவட்ட செயலகங்களிலிருந்து வாக்குப்பெட்டிகளை பலத்த பாதுகாப்புடனேயே வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படும் வாக்குப்பெட்டிகளையும் ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை இரவாவதற்கு முன்னர் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் வாக்கெண்ணும் நிலையங்களில் சுமார் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர். பாதுகாப்பு கடமைகளில் 68 ஆயிரத்து 800 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் முப்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பை முன்னிட்டு சகல வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் உட்பட ஏனைய சகல பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும். வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 28 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னிட்டு சகல மதுபானசாலைகளும் வாக்களிப்பு தினமான நாளையும் மறுநாள் 27ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. கலால் திணைக்களத்தின் விதியை மீறுகின்ற மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் சட்டவிரோதமான மதுபானங்களை விற்பனை செய்வோர் அல்லது முன்கூட்டியே கொள்வனவு செய்து விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்திருப்பதுடன் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’