.jpg)
இலங்கை ஊடகங்கள் மீது அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருவதையடுத்து நியூயோர்க்கில் தளத்தைக் கொண்டுள்ள செய்தியாளர்களை பாதுகாப்பதற்கான குழு ஜனவரி 26 தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளுக்கும் விடுத்துள்ள கோரிக்கையில் தேர்தல் பிரசாரங்களையும் வாக்களிப்பு நடைமுறைகளையும் எழுதுவதில் ஈடுபடும் செய்தியாளர்களின் பங்களிப்பை மதித்து நடந்து கொள்ளுமாறு கேட்டுள்ளது.
பிபிசி சிங்கள சேவையின் நிருபர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மேற்படி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடக செய்திகளின்படி, செய்தி எழுதுவதில் ஈடுபட்டிருந்த பிபிசியின் பெண் நிருபர் விவசாய அமைச்சரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் அரசியல் குழு ஒன்றினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.
தக்ஷிலா தில்றுக்ஷி என்ற பிரஸ்தாப நிருபரை பின் தொடர்ந்து சென்ற குழுவினர் அவர் மீது பொல்லுகளõல் தாக்கியுள்ளனர். அவரது ஒலிப்பதிவு உபகரணம், கையடக்கத் தொலைபேசி ஆகியனவும் அபகரிக்கப்பட்டுள்ளன.
தக்ஷிலாவுக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி செய்தியாளர்களை பாதுகாப்பதற்கான குழு விபரங்களை சேகரித்து வருகிறது என்று ஜேர்மன் செய்தி ஸ்தாபனம் டிபிஏ தெரிவித்துள்ளது. தற்போதைய தேர்தல் பிரசாரம் தொடர்பான நூற்றுக்கணக்கான வன்முறைச் சம்பவங்களை தேர்தல் கண்காணிப்பு வலையமைப்புகள் பதிவு செய்துள்ளன என்று இலங்கையின் ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தக்ஷிலா மீதான தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்த செய்தியாளர்களை பாதுகாப்பதற்கான குழு, செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடமும் அரசியல் கூட்டங்களை ஒழுங்கு செய்பவர்களிடமும் கேட்டுள்ளது என்று மேற்படி அமைப்பின் ஆசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பொப் டியெற்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தத்திலிருந்து நாடு மீட்சி பெறும் இவ்வேளையில் செய்தியாளர்கள் அச்சமின்றி தேர்தல் செய்திகளை எழுதுவதற்கான சூழலை உருவாக்க சகல கட்சிகளும் பாடுபட வேண்டும் என்பது முக்கியமாகும் என்று அவர் கூறினார்.
செய்தியாளர்களை பாதுகாப்பதற்கான குழு இலங்கை பற்றிய அதன் விசேட அறிக்கையில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் அவை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் தவறியமை பற்றியும் விரிவாக எழுதியுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தை வகிப்பது குறித்தும் இக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 12 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய குழு இவற்றில் ஒன்றுக்காயினும் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’