
அரசாங்கம் கூறுவதைப்போல் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.
எனது நாட்டை துண்டாடுவதற்கோ அல்லது அதன் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரகாரமே பலதரப்பட்ட அரசியல் சக்திகள் எனக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும் எனது சேவைக் காலத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
40 வருடகால அரச சேவையில் பணியாற்றிய நான் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பினை எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன்.
இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியின் பிரகாரம் புலிப் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்களே அறிவர்.
ஊழல் மோசடிகளோ அல்லது நிதி தொடர்பிலான மோசடிகளோ இல்லாவிட்டால் தரகுப் பணம் சம்பாதிப்பதிலோ ஈடுபட்டிருந்தால் என்னால் தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்டிருக்க முடியாது.
எனவே, எந்தவிதமான ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை என்பதை என்னால் பகிரங்கமாக கூறிக் கொள்ள முடியும். அரச சேவையில் இருந்த காலப்பகுதியில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முழுமையான ஆதரவு மற்றும் அமைப்புக்கு மத்தியிலேயே நான் அரசியல் பயணத்திற்குள் பிரவேசித்துள்ளேன்.
இப்போது நான் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல், எந்தவொரு அரசியல் தலைவர்களுடனும் கூட ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை.
அவர்கள் என்னுடன் இணைந்திருப்பது என்மீதும் எனது கடந்தகால 40 வருட நம்பிக்கைமிக்க சேவையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணத்தினாலேயே ஆகும். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தோல்வியைக் கண்டுகொண்டிருக்கின்ற தற்போதைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் என்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
என்மீது விரல் நீட்டி குற்றம் சுமத்துபவர்கள் என்மீது மட்டுமல்லாது என்னைப்போல் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகவே குற்றம் சுமத்துகின்றனர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதனால் அரச சேவையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு இலக்காகியுள்ளனர்.
எனவே, என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அரச ஊழியர்களின் சேவைøய பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் தூக்கியெறிவது ஜனாதிபதியின் இயல்பான விடயமாகும்.
ஆனாலும் அந்த நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கவில்லை என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’