வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஜனவரி, 2010

தேர்தல் பிரசாரங்கள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கின்ற நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன.

1981ஆம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்திற்கு அமைவாக சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்வரும் தினங்களில் அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ அல்லது எந்தவொரு தனிநபருமோ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயல் என்பதுடன் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்நிலையில், தேர்தல் காலங்களில் வன்முறைகள் மற்றும் சட்டத்திற்கு முரணான சம்பவங்கள் இடம்பெறாத வகையிலும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் வகையிலும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

773 வன்முறைகள்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வரை தேர்தல் விதிமுறைகளை மீறிய 773 சம்பவங்கள் தமக்கு பதிவாகியிருப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. தாக்குதல் மற்றும் சொத்துக்களுக்கு ஊறுவிளைவித்த 187 சம்பவங்களும் ஆட்களை தாக்கிய 134 சம்பவங்களும் இதில் அடங்கியிருப்பதாகவும் கபே குறிப்பிட்டுள்ளது. ஆதரவாளர்களிடம் கோரிக்கை இது இவ்வாறிருக்க இன்று நள்ளிரவுடன் சகல தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நிறைவுக்கு வருகின்றமையினால் தேர்தல் நடைபெறும் தினமான 26ஆம் திகதி வரையிலான தினங்களிலும் அதன் பின்னரும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என சகலரும் அமைதி பேணுமாறும் இக்காலப் பகுதிக்குள் எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ, அநாவசியமான குழப்பங்களை விளைவிப்பதற்கோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் செயலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’