-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வியாழன், 28 ஜனவரி, 2010
வடக்கு கிழக்கில் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கே அரசின் தோல்விக்கு காரணம்: லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அரசாங்கத்தின் வாக்குகள் குறைந்தமைக்கு பிரதான காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சரத் பொன்சேகாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை வைத்துக் கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தமையே என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கூட்டமைப்பினரின் இவ்வகையான பிரசாரம் காரணமாக அந்த பகுதிகளில் மீண்டும் இனவாதம் ஒன்று தோற்றம் பெற்றுள்ளதாகவும், அதனை களையும் தேவை அரசாங்கத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசாங்கத்துக்கு நாடளாவிய ரீதியாக தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு அரசாங்கம் கிரமமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் பொருட்டே கருணா, பிள்ளையான் போன்றோர்களை அரசியலில் முக்கிய பதவிகளில் அமர்த்தி, தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சி, அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை ஒருவாரத்தினுள் அறிவிக்க வேண்டும் எனவும் இல்லை எனில், அரசாங்கம் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் அடுத்த ஒரு மாத காலப்பகுதியில் பெரிய அளவிலான மாற்றம் ஒன்றும் இடம்பெறலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குதாயின், யானை சின்னத்துடனா, அல்லது அன்னப்பறவை சின்னத்துடனா என்பதை தீர்மானித்துக் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்னப்பறவை சின்னத்துடன் வருமேயானால், தேர்தலுக்கு பின்னரான 2005ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு நடந்ததை போலவே அந்த கட்சியின் நிலைமையும் மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் இம்முறை நடைபெற்ற தேர்தலில் பாரிய பின்னடைவை கண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய மிக்க ஆசனங்களான மகியங்கனை, செங்கடகல, போன்ற ஆசனங்களை கூட இழந்துள்ளது. இதற்கான காரணம் அந்தக்கட்சி, கிராமிய மக்களின் மனங்களை அறிந்துக் கொள்ள முற்படாமையே என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போக்கை ஐக்கிய தேசிய கட்சி கடைபிடிக்குமாக இருந்தால், அந்த கட்சியால் ஐந்து தடவைகளுக்கு பின்னரே ஒரு தேர்தலில் வெற்றி கொள்ள முடியுமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தான் அரசாங்கத்திற்கு வடக்கில் தமிழ் வாக்குகளை பெறமுடியாது போனது என்றால், அரசாங்கத்தின் பக்கம் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோரின் பலம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய அவர், டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைப்பகுதிக்கு மாத்திரமே தமது செல்வாக்கை கொண்டிருப்பதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நெடுங்காலமாக வடக்கு மக்கள் மத்தியில் அரசியல் பலத்தை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு தெற்கை போல வடக்கிற்கும் அதிகாரத்தை வழங்க முடியும் என்று மாத்திரமே சொல்ல கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனையும் தாண்டி மேலதிகமான ஒரு அதிகாரத்தை வழங்க முடியும் எனக் கூறி வாக்கு கோரியிருந்தமையும் இதற்கான ஒரு காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனிலும் மேலான ஒரு சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்க முடியும் என தெரிவித்த அவர், அது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை ஜெனரல் பொன்சேகா தடுப்பு காவலில் வைக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பிய வேளையில், அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகயை மேற்கொண்டமைக்கு நாட்டின் அமைதியான சூழலை கருத்தில் கொண்டே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த ஹோட்டலின் இரண்டு மாடி தட்டுகளினதும் 70 தொடக்கம் 80 அறைகளை மொத்தமாக வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்தார்.
இவ்வாறு ஒருவர் தங்கி இருப்பது ஏதேனும் திட்டத்தின் அடிப்படையிலேயே என கருதிய அரசாங்கம் இவ்வாறான ஒரு பாதுகாப்பினை வழங்க வேண்டி ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் பொன்சேகா குற்றமிழைத்தவர் எனவும், அவருக்கு உரித்தான முழுமையான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னரே அவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருந்த போது சர்வதேசத்தின் தூதுவர்கள் சிலர், அவரை வெளியே கொண்டு செல்வதற்கு முயற்சி செய்திருந்த போதும், அதனை அரசாங்கம் தடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தலை குழப்ப சர்வதேச ரீதியாகவும், உள்ளூர் ரீதியாவும் பொன்சேகா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தீட்டியிருந்த திட்டம் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் தடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சரத் பொன்சேகா தப்பி செல்வார் என கருதியே விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து அவரிடம் வினவிய போது, அது அவ்வாறான ஒரு தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவ்வாறு பொன்சேகா செல்வதை தடுக்க வேண்டும் எனின் நீதிமன்ற நடவடிக்கை மூலம் அரசாங்கத்துக்கு செயற்பட முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’