
ஜனாதிபதித் தேர்தலில் அன்னாசிப் பழச் சின்னத்தில் சுயாதீனமாக போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ஐ. எம். இல்யாஸ் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்துள்ளார். இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் வெளியிடப்பட்டது. இதன்போது ஐ. தே. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவரும், சுயாதீனக் குழுவின் வேட்பாளருமான டாக்டர் ஐ. எம். இலியாஸுக்கு கைலாகு கொடுத்து வரவேற்றார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் ஐ. எம். இலியாஸ், இன்று நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கு வித்திடப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரளுகின்றன. இதனை வரவேற்கின்றேன். இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நாட்டில் அரசியல் மாற்றம் அவசியமான தேவையாகும். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றன. வரலாற்று ரீதியான இம் மாற்றம் வரவேற்கத்தக்கது.
யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். எனவே 26 ஆம் திகதி காலை வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று பொன்சேகாவுக்கு வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும். விசேடமாக முஸ்லிம் மகளிர் தமது வாக்குகளை வீணடிக்காது அன்னச் சின்னத்தை அமோக வாக்குகளால் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எமது அன்னாசிப் பழச் சின்னம் இன்று அன்னச் சின்னத்திற்கு மாறி விட்டது என்றார். டாக்டர் ஐ. எம். இலியாஸ் முன்னாள் யாழ். மாவட்ட எம்.பி. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’