.jpg)
சிகாகோ செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டதால், விமானம் மீண்டும் செயின்ட் லூயிஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் மிசோரி மகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் விமான நிலையத்தில் இருந்து, நேற்று "யுனைடெட் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று, சிகாகோ நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்படும் நேரத்தில், விமான நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் வேலை செய்யவில்லை என்பதால், சாதாரண முறையில் ஆட்களைக் கொண்டு, விமானத்தில் ஏற உள்ள பயணிகள் பரிசோதிக்கப்பட்டனர்.பின்னர் விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. விமானம் புறப்பட்டுச் சென்ற உடன், விமான நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் செயல்படத் துவங்கின. அப்போது, விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றிய விவரங்களை விமான நிறுவன அலுவலர்கள் பரிசோதித்தனர்.
அதில், ஒரு பயணியின் பெயர் பயங்கரவாதி ஒருவரின் பெயரைப் போன்று இருந்தது. சந்தேகத்திற்கு உரியவர்கள் என, சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர் பட்டியலில் இந்தப் பெயரும் இடம் பெற்றிருந்தது. பதறிப் போன அதிகாரிகள், விமானத்தை திருப்பும்படி பைலட்டிற்கு உத்தரவிட்டனர். அதன்படி, விமானமும் செயின்ட் லூயிஸ் விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது. உடன், விமான நிறுவன அதிகாரிகள் விமானத்தில் ஏறி பயணிகளை பரிசோதித்தனர். சந்தேகத்திற்கு இடமான பயணியிடமும், தீவிர விசாரணை நடத்தினர். முழுமையாக விசாரித்த பின், விமானம் மீண்டும் சிகாகோ செல்ல அனுமதித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’