வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஜனவரி, 2010

புலிகளின் முக்கிய உறுப்பினர் மலேசியா ராஜன் கைது!?


விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான "மலேசியா ராஜன்" சிறிலங்கா புலனாய்வு பிரிவு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றின் கூட்டுச்சதி மூலம் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், இவரை நேற்று காலை கொழும்பில் கைது செய்ததாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முக்கிய - மூத்த - உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42) இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு விமானநிலையம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமானநிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த அந்நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதன்பின்னர், அவர் சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர், மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் - அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார் என்றும் 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய லேடன் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான இவர் அந்த அமைப்பினருக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்ளுதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரை கொழும்புக்கு கூட்டிவருதல் போன்ற செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தார் என்றும் அவர் கூறினார்.

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இவர் கைது செய்யப்பட்டாரா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி, தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பதில்களை தாம் வெளியிடவிரும்பவில்லை என்றார்.

அதேவேளை, குறிப்பிட்ட நபர் எந்த நாட்டிலிருந்து சிறிலங்கா வந்தார் என்பது குறித்தோ எப்போது வந்தார் என்பது குறித்தோ சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளில் தெரியவந்துள்ளதா என்பது குறித்தோ தன்னால் பதிலளிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டுச்சதி மூலம் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலேசியா ராஜன் மலேசியா அல்லது தாய்லாந்து விமானநிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’