வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 டிசம்பர், 2009

அமெரிக்க விமானத்தை தகர்க்க நைஜீரிய பயணி முயற்சி


அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.

நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல் முதல்லாத் (வயது 23) என்பவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு வடக்கு மேற்கு ஏயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். அப்போது விமானத்தில் ஒரு சாதனத்தை வெடிக்க வைக்க அவர் முயற்சித்துள்ளார்.

சக பயணிகள் மற்றும் விமானத்திற்குள் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து அவரது முயற்சியைத் தடுத்து விட்டனர். அப்துல்லுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அந்த விமானம் டெட்ராய்ட்டில் தரையிறங்கவிருந்த சமயத்தில், தான் வைத்திருந்த அந்த சாதனத்தை வெடிக்க வைக்க அந்த நைஜீரியர் முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தீயால் புகை வாசம் வந்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த பயணிகள் அப்துல்லை மடக்கிப் பிடித்தனர். மேலும் தீயை அணைக்கவும் முயற்சித்தனர்.

இந்த அமளியைப் பார்த்து பிற பயணிகளும் ஓடி வந்து அப்துல்லை தடுத்துப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

விமானத்தில் பயணம் செய்த அமெரிக்கரான சையத் ஜாப்ரி என்பவர் கூறுகையில், "நான் விமானத்தின் 16 ஆவது இருக்கை வரிசையில் அமர்ந்திருந்தேன். எனக்கு 3 வரிசைக்கு முன்புதான் அப்துல் அமர்ந்திருந்தார். எனக்கு முன்பு லேசான புகையும், அதைத் தொடர்ந்து சத்தமும் கேட்டது. என்ன என்று பார்க்க எழுந்தபோது பலர் அப்துல்லை மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். 15 நிமிடங்கள் விமானத்தில் பெரும் அமளியாக இருந்தது" என்றார்.

இந்த முயற்சியின்போது அப்துல்லுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மேலும் 2 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக தரையிறங்கியது.

கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹவாய் தீவில் விடுமுறையைக் கழித்து வரும் அதிபர் ஒபாமாவுக்குத் தகவல் தரப்பட்டது.இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பில் பர்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபரின் ராணுவ உதவியாளர், இந்த தீவிரவாத தாக்குதல் முயற்சி சம்பவம் குறித்து அதிபருக்குத் தெரிவித்துள்ளார்" என்றார்.

இதைத் தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன், தேசிய பாதுகாப்புப் பிரிவு தலைவர் டெனிஸ் மெக்டொன்னாக் ஆகியோருடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார் ஒபாமா.

நிலைமையை அதிபர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவருக்கு விசாரணையில் கிடைத்து வரும் தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அப்துல் பயணம் செய்த விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 278 பேர் இருந்தனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11.53 இக்கு அது தரையிறங்கியது.

இந்த தகர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும், விமானங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப் பயணிகளும் அதி தீவிர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சியால் அங்கு மீண்டும் தீவிரவாத பீதி அதிகரித்துள்ளது.

1 கருத்துகள்:

http://abebedorespgondufo.blogs.sapo.pt/ சொன்னது…

POrtugal

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’