வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதன் வாயிலாகவோ தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவதன் மூலமாகவோ எந்தப் பயனும் ஏற்படாது


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிப்பதாலோ அல்லது தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவதாலோ எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுத்ததாக அமைந்து விடும் என்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இன்று அரசியல் தலைமைத்துவத்தை இழந்து நிற்கின்றார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அதன் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் அண்மையில் இந்தியாவில் இருந்த சமயம் வெளிநாடுகளிலிருந்த புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் அவரை அணுகி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் வினவியபோது அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதியரசர் மேலும் கூறியதாவது:

“தனிப்பட்ட மனிதர்களின் சுயநலம் மேலோங்கி அவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகளால் தமிழ் மக்களின் மனங்கள் கலக்கத்திலும் குழப்பத்திலும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

நான் அண்மையில் இந்தியாவில் இருந்தபோது வெளிநாட்டிலிருந்து சில அன்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தமிழர் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நான் கூறிய பதில் இதுதான். ஒரு தமிழன் தனித்துவமாய் ஜனாதிபதித் தேர்தலில் நின்று எல்லாத் தமிழ் பேசும் மக்களும் அவருக்கு வாக்களித்தாலும் கூட எந்த நன்மையும் எமக்குப் வரப்போவதில்லை. முக்கியமான இருவரில் ஒருவர்தான் பதவிக்கு வரப்போகின்றார். பதவிக்கு வரும் அவர் தனக்கு வேண்டியதைத்தான் செய்யப்போகிறார்.

நாங்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் அதேநிலை தான்.இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் கையாலாகாத தன்மையையே வெளிக்காட்டும். மேலும் தங்களின் ஜனநாயக உரித்தை அவர்களும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையும் எடுத்துக்காட்டும்.

இதுவரை காலமும் தேர்தல்களில் தமிழ் மகன் ஒருவரை நிறுத்துவது தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பன போன்ற காரியங்கள் தமிழ் மக்களின் பின்னணியில் ஆயுதம் தாங்கியவர்கள் உறுதுணையாய் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தமது தனித்துவத்தைக் காட்டும் விதத்தில் நடைபெற்றிருக்கலாம்.

ஆனால், ஆயுதப்போராட்டம் மௌனித்த நிலையில் இப்போதைக்கு அதேபோன்ற சிந்தனைக்கு இடமில்லை என்றே கொள்ளவேண்யுள்ளது. புதிய இராஜதந்திர அரசியல் நடைமுறைகளை நாங்கள் கையாள்வது இன்றைய பின்னணியில் அவசியமாகின்றது. இந்த நிலையில் பதவிக்கு வர எத்தனிக்கும் இருவரையும் சந்தித்து தமிழ் மக்களுக்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆகக்கூடிய நன்மைகள் எவை என்பதை ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது என்று கூறினேன். நான் கூறியவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்வதையிட்டு மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். இருவரிடமும் பேசிப் பார்த்து எவ்வாறு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டமைப்பு எடுத்தியம்ப வேண்டும். இது சம்பந்தமாகக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் கூறுவதைத் தமிழ் மக்கள் ஏற்க வேண்டும்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஆளுக்கொரு அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும். 22 பேர் தங்கள் வாய்க்கு வந்ததை வெளியிடத் தொடங்கினார்களானால், தமிழ் மக்கள் மனங்கள் குழம்பிவிடும். அதைத் தவிர்க்க வேண்டும். கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும். மக்கள் கலவரமுற்ற நிலையில் இருப்பதை தலைமைத்துவம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். நாங்கள் தமிழ் மகன் ஒருவரை நிறுத்தினாலோ தேர்தலைப் பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்கள் விட்டுக் கொடுத்ததாகவே அமையும். அல்லது மறைமுகமாக எவரையோ ஆதரித்ததாக முடியும்.

எங்கள் கையில் வாக்கு என்ற பலத்த ஆயுதம் ஒன்றிருப்பதை நாங்கள் மறத்தலாகாது. காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் எங்கள் சகோதர மலைநாட்டுத் தமிழர்களை வழிநடத்தியபோது வேலை நிறுத்தம் என்ற பாரிய ஆயுதத்தைப் பாவித்தார்.

ஆனால் வட கிழக்கு இலங்கைத் தமிழ் மக்கள் போர் ஆயுதங்கள் மேல் நம்பிக்கை வைத்து இன்று செய்வதறியாது நிற்கின்றார்கள். எனினும் அவர்கள் சகல ஆயுதங்களையும் இழந்த நிலையில் உள்ளார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு விடக்கூடாது. ஜனநாயக ரீதியாகப் பார்த்தால் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையானது ஒரு பாரிய ஆயுதம்.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் வரும் பொதுத் தேர்தலில் இரு பாரிய கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலம் பெற்றிருந்தால் அவர்களுள் யாரைத் தமிழ் மக்கள் ஆதரிக்கின்றார்களோ அவர்களே அரசாங்கம் அமைக்க முடியும். சென்ற தடவை 22 பேர் பாராளுமன்றத்தில் இருந்தனர். இம்முறை அந்த ஒற்றுமையை நாங்கள் இழந்துவிட்டோமானால் எங்கள் ஒரேயொரு ஆயுதத்தை நாங்களே விட்டெறிந்த நிலைக்கு வந்துவிடுவோம். தமிழரின் ஒற்றுமை நாட்டின் ஜாதகத்தை கணிக்க உதவும். பதவியில் இருக்கும் ஒரு வரை கீழ் இறக்கவும் இன்னொருவரை மேல் ஏற்றவும் தமிழ் பேசும் மக்களால் முடியும் என்பதைச் சிலர் அறிந்து வைத்துள்ளதால்தான் தமிழ் பேசும் மக்களிøடயே வேற்றுமைகளை விதைக்க அவர்கள் பாடுபடுகின்றார்கள்.

எங்கள் வேற்றுமைகள் அவர்களுக்கு உதவும். எங்கள் ஒற்றுமை எங்களுக்கு உதவும். இவ்வளவுதான் என்னால் கூற முடியும்.” எனத் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’