வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சிவாஜிலிங்கம குட்டை குழப்புகிறார்


சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவர் போட்டியிடுவதை அங்கீகரிக்கவில்லை. ஆதரிக்கவுமில்லை. கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டதாக சிவாஜிலிங்கம் கூறுகின்றார். இவர் கூட்டமைப்பிலிருந்து விலகுவது செல்லுபடியாகுமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

சிவாஜிலிங்கம் ரெலோ என்ற அரசியல் கட்சியின் உறுப்பினர். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு உறுப்புக் கட்சி. கூட்டமைப்பிலிருந்து ஒரு உறுப்புக் கட்சி வெளியேறலாம். கட்சியொன்றின் உறுப்பினரொருவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை. அவர் தான் அங்கத்துவம் வகிக்கும் கட்சியிலிருந்து தான் வெளியேற வேண்டும். கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாகக் கூறுவது வேடிக்கையானது. ரெலோவிலிருந்து வெளியேறுவதாக சிவாஜிலிங்கம் சொன்னால் அதில் அர்த்தம் உண்டு.

னாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையினரின் ஆதரவு இல்லாமல் தமிழர் ஒருவர் வெற்றியீட்டுவது சாத்தியமில்லை. சிவாஜிலிங்கத்துக்கு அவர் சார்ந்திருந்த கூட்டமைப்பின் ஆதரவே இல்லாத நிலையில் பெரும்பான்மையினரின் ஆதரவு பற்றிப் பேசத் தேவையில்லை. அப்படியானால் இவர் எதற்காகப் போட்டியிடுகின்றார் என்ற கேள்வி எழுகின்றது-

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவே போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் சொல்கிறார். அதற்கு விளக்கமும் கூறுகின்றார். தான் போட்டியிடுவதன் மூலம் பிரதான வேட்பாளர்கள் இருவரும் ஐம்பது வீதத்துக்குக் கூடுதலாக வாக்கெடுக்க இயலாது போனால் அதுவே வெற்றி என்கிறார். இது எப்படி அவருக்கோ தமிழினத்துக்கோ வெற்றியாக முடியும்?

இரண்டு பிரதான வேட்பாளர்களுள் ஒருவராவது ஐம்பது வீதத்துக்குக் கூடுதலான வாக்குகளைப் பெறாவிட்டால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை தேர்தல் சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மற்றைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளிலுள்ள இரண்டாவது தெரிவு வாக்குகளைத் தனித்தனியாகக் கணக்கெடுத்து, பிரதான வேட்பாளர்களின் வாக்குகளுடன் அவரவர்க்குரிய வாக்குகள் சேர்க்கப்படும். இந்த வகையில் ஐம்பது வீதத்துக்கு மேல் வாக்குகளை பெற்றவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். இந்த முறையில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.

பிரதான வேட்பாளர்கள் இருவரையும் விமர்சிக்கும் சிவாஜிலிங்கம் அவர்கள் ஐம்பது வீத்ததுக்குக் குறைவாக வாக்கெடுப்பது தனக்கு வெற்றி எனக் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது. அதனிலும் பார்க்கச் சிறுபிள்ளைத்தனமானது இந்தத் தர்க்கத்தைத் தமிழ் மக்கள் நம்புவார்கள் என நினைப்பது.

புலிகள் தோற்கடிக்கப்படும் வரை சிவாஜிலிங்கம் இந்தியாவில் புலிகளின் பேச்சாளராகச் செயற்பட்டவர். இப்போது எந்தக் கொள்கையை முன்வைத்துப் போட்டியிடுகின்றார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இன்னும் தெரியப்படுத்தவில்லை.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அடைவதற்கான முயற்சிக்குச் சாதகமாக இத் தேர்தலைத் தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலையில் சிவாஜிலிங்கம் களத்தில் குதித்துக் குட்டை குழப்புகின்றார். அரசியல் தீர்வு முயற்சிகளைப் புலிகள் திட்டமிட்டுக் குழப்பினார்கள். அவர்களின் பதிலியாக இப்போது சிவாஜிலிங்கம் வந்திருக்கின்றாரா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’