வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

புதிய தலைமுறையினருக்கு உலகின் ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும்.


புதிய தலைமுறையினருக்கு உலகின் ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டும்.
தி.ஸ்ரீதரன் பொதுச் செயலாளர்பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
அகதிகளான மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும். இனப்பிரச்சனைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும். அத்தகைய தீர்வொன்று தமக்கு கிடைத்திருக்கிறதென்று தமிழ் மக்கள் உணரக்கூடியதாக இருக்க வேண்டும். வன்முறை கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனநாயக சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இதன் பகுதியாக மக்கள் பயத்திலிருந்து விடுபடுவதற்கும், அரசியல், சமூக, பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்தத்தின் பின்னர் மக்கள் அழுது வடியும் நிலையென்றில்லாமல் சமாதான நடவடிக்கைகள் பிரவாகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் அரசியல் சக்திகள் குறிப்பாக தமிழ் அரசியல் சக்திகள் இணைந்து இதய சுத்தியுடன் பணியாற்ற வேண்டும். வேறு வேறு கொள்கைகள், அபிப்பிராயங்கள் இருந்தாலும் எமது மக்களை கௌரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வைப்பதற்கு இச் சக்திகள் இணைந்து செயற்பட வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் மக்கள் அனுபவித்துவரும் துயரங்கள் முடிவுக்கு வருவதில் ஆக்கபூர்வமாக தீர்க்க தரிசனத்துடன் பங்களிக்க வேண்டும். சொந்த நிலத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக, இயல்பாக வாழ்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்தினாலே அது மிகப் பெரும் வரலாற்றுப் பணியாக இருக்கும். கடந்த 30 வருடங்களில் தமிழ் மக்களின் உயிர், உடைமை, உழைப்பு என்பன பாரியளவில் விரயமாக்கப்பட்டன. போராட்டம் என்பது மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, ஆக்கபூர்வமான வழிகளில் வாழ்வதற்கான நோக்கங்களையே கொண்டது. ஆனால் தமிழர்களின் போராட்டம் மரணத்தை பூசித்து அழிவையே தாரக மந்திரமாக கொண்ட பாசிசமாக மாறியதன் விளைவு இன்று தமிழ் மக்களை பாரிய இன்னல்களுக்கு வேதனைகளுக்கு ஆளாக்கியுள்ளது.எனவே விரயங்களையும், இழப்புக்களையும், வேதனைகளையும் கருத்திற்கெடுத்து செயற்பட வேண்டிய காலமிது. ஐரோப்பாவிற்கோ, வட அமெரிக்காவிற்கோ சென்றவர்கள் ஏதோவொரு வகையில் வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்திருக்கிறார்கள். ஆனால் உள்ளுரில் வாழ்க்கை நேர்த்தியாக இல்லை. அலங்கோலமாகவே அமைந்திருக்கிறது. அகதிகளான மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அல்லல் படுவது ஒருபுறமிருக்க விதவைகளாகவும், ஊனமுற்றவர்களாகவும், உற்ற சுற்றத்தை இழந்தவர்களாகவும், சொந்த ஊரை இழந்தவர்களாகவும் எம்மில் ஒரு பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெருமளவு இளம் வயதினர் கல்வியை இழந்திருக்கிறார்கள். 16, 17 வயது பிள்ளைகள் பலர் கொப்பி, புத்தகங்கள் இல்லாமல் கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக முகாம்களில் வாழ்கிறார்கள். ஏற்கனவே 2006 முற்பகுதியில் யுத்தம் ஆரம்பித்து பல்வேறு தடவைகள் இடம் பெயர்ந்த சென்றவர்கள் இந்த இளந் தலைமுறையினர் சில வருடங்களாகவே அவர்களின் கல்வி மீது இடி விழுந்திருக்கிறது. பல பிள்ளைகள் பலாத்காரமாக புலிகளால் படையணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால் உயிரிழந்து விட்டார்கள். ஒரு கணிசமான தொகுதியினர் ஊனமுற்றவர்களாகி இருக்கிறார்கள். தமிழ் சமூகத்தில் இளம் வயதினராக இருப்பதே ஒரு பாழாய் போன விடயம் என்றாகிவிட்டது. இரண்டு தலைமுறைகள் வன்முறை சூழலுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டது. எனவே எமது சமூகத்தில் தன்னம்பிக்கையை ஊட்டுவதும், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைப்பதும், உண்மையான சுதந்திர இயக்கத்தின் தார்மீக தாற்ப்பரியங்களை தெளிவுபடுத்துவதும் மானிட உயிர்களின் மகத்துவத்தை உணர்த்துவதும் எமது சுற்றாடலை பாதுகாப்பதற்கும் சகல விதமான சமூக அநீதிகளை ஒழித்துக் கட்டுவதும், சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதும் சகோதர சமூகங்களுடன் உறவுகளை பேணுவதும், சகோதர சமூகங்களின் இன்ப துன்பங்களை புரிந்து கொள்வதும், பங்கு கொள்வதும் நட்புறவை வளர்ப்பதும் என்பனவெல்லாம் எமது இளந் தலைமுறையினருக்கு புரிய வைப்பதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். நாம் உலக மானிடத்தின் ஒரு பகுதியினர் என்பது உணர வைக்கப்பட வேண்டும்.. நாம் பிரத்தியேகமான பிறவிகள் என்ற விகாரமான சிந்தனை களையப்பட வேண்டும். ஒரு புதிய தலைமுறை, அகங்காரமற்ற அகிம்மை வழியில் நம்பிக்கைக் கொண்ட சத்திய வழியில் நடக்கும் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்காக தமிழ் மக்களின் நலன்களில் இதய சுத்தியும், நேர்மையும் கொண்ட சக்திகள் இணைந்து செயற்பட வேண்டும்.. இச் சக்திகள் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடனும், மலையக, முஸ்லீம் மக்களுடனும் இணைந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்ற தயாராக வேண்டும். இலங்கை ஒரு பல்லினங்களின் நாடாக நிர்மாணிப்பதில் தனது அக்கறையை செலுத்த வேண்டும். அல்லாமல் குறுகிய அரசியல் நலன்களுக்காக உணர்ச்சிகளை கிளறி, சமூகத்தை தொடர்ந்து அழிவுப் பாதையில் வைத்திருக்கும் அரசியலை கைவிட வேண்டும். ஏற்கனவே 30 வருடங்களில் ஆயுதமேந்திய அரசியல் பாசிசமாக மாறியதில் ஆயுதம் ஏந்தாத அதற்கு முந்திய தலைமுறையினருக்கு சித்தாந்த ரீதியான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பதை எந்த விருப்பு வெறுப்புக்கும் அப்பால் சொல்லியே ஆக வேண்டும். எனவே சமூகத்தின் மத்தியில் செயற்படும் போது புதிய தலைமுறையினரிடம் நஞ்சை வார்க்காமல், குரோதங்கள், விரோதங்களை வளர்க்காமல் எமது மக்களின் தார்மீக நியாயங்களை விளங்க வைக்க வேண்டும். எப்படி போர் பற்றிய எண்ணங்கள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவான பாசிசம் பற்றிய பெருமித உணர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலிப்பு நோயை உருவாக்கினவோ அதேபோல் இன்று சிங்கள மக்கள் மத்தியில் போர் வெற்றி பற்றிய வலிப்பு நோய் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய்கள் நீண்காலத்திற்கு நீடிக்கக் கூடாது. சகல இன சமூகங்களினதும் சமத்துவமான சகோதரத்துவமான வாழ்வுரிமையை அங்கீகரிக்க வேண்டும். நாகரிகமான மனிதர்களாக நல்லியல்புள்ள மனிதர்களாக வாழ்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு திறந்த மனதும் ஆரோக்கியமான எண்ணமும் கொண்ட தலைமைத்துவம் எம் மத்தியில் உருவாக வேண்டும். தி.ஸ்ரீதரன்பொதுச் செயலாளர்பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’