
யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் இயங்கி வரும் உடுவில் மகளிர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், மாணவிகளுக்கும் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கல்லூரியின் பழைய முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இன்று (09.09.2009 புதன்கிழமை) காலை முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவிகளை வகுப்புக்களுக்கு செல்லுமாறு கல்லூரியின் நிர்வாக பீடத்தை சேர்ந்தோர் பணித்த பொழுது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக முற்றியதில் மாணவிகள் சிலர் மிதமான காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இவ்வாறு காயமடைந்த மாணவிகளில் மூவர் இன்று பிற்பகல் தெல்லிப்பளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
கல்லூரியின் முகாமையாளரால் தள்ளிவீழ்த்தப்பட்டதாலேயே இவர்கள் காயமடைந்ததாக மாணவிகள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள பொழுதும், இவற்றை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.
இதனிடையே, கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து இன்று காலை முதல் அங்கு பெரும் எண்ணிக்கையில் சிறீலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டதோடு, இது தொடர்பாக உடுவில் பிரதேச செயலரிடம் நேரில் முறையிட்ட மாணவிகள், பின்னர் வலிகாமம் கல்வி வலயப் பணிமனைக்கு ஊர்வலமாக சென்று, தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
உடுவில் மகளிர் கல்லூரியின் தற்போதைய முதல்வரையும், முகாமையாளரையும் இடமாற்றம் செய்யுமாறு கோரி கடந்த திங்கட்கிழமை (07.09.2009) வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவிகள், பின்னர் இதுவிடயமாக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா அவர்கள் வழங்கிய உறுதிமொழியை ஏற்று, மறுநாள் செவ்வாய்க்கிழமை (08.09.2009) வகுப்புக்களுக்கு திரும்பிய பொழுது, கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவி ஒருவர் எச்சரிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தன.
இதனையடுத்தே இன்று (09.09.209) மீண்டும் வகுப்புப் புறக்கணிப்பில் மாணவிகள் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
இதேநேரத்தில் மாணவிகளுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை தொடர்பாக ஆராயும் பெற்றோர் சந்திப்பு ஒன்று, நாளை (10.09.2009 வியாழக்கிழமை) சுன்னாகம் சிவன்கோவில் திருமண மண்டபத்தில் ஏற்பாடாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’