வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
un லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
un லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலை வருத்தமளிக்கிறது-நீல் பூனே


இலங்கையின் மனிதாபிமான தேவைகள் பொருட்டான, உதவி வழங்குனர்களின் பொறுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.

மனிதாபிமனத் தேவைகள் தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு நன்கொடையளர்களிடமிருந்து கிடைத்த பிரதிபலிப்பு சிறப்பாக இருந்தது.ஆனால் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலைமை குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முகாம்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலையிலேயே இருக்கின்றமை வருத்தமளிப்பதாக இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்படாமை மற்றும் பெருந்தொகையானவர்கள் விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால், பெரும்பாலான உதவி வழங்குனர்கள் அடுத்து 3 அல்லது நான்கு மாதங்களுக்கான உதவிகள் குறித்து சிந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உதவி வழங்குனர்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் செயற்திட்டங்களின் ஊடாக மனிதாபிமான பொறுப்புகளுக்கு உதவி வழங்குவது, மனிதாபிமான விளைத்திட்டத்தின் ஊடாக 2009ம் ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது.

பாரிய எண்ணிக்கையாக மக்கள் இடம்பெயர்ந்த காலக்கட்டத்தில் தேவையாக இருந்த 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் உதவி வழங்குனர்கள் பொறுப்புடன் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதானமாக உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக பல்வேறு நிதியிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் ஒக்டோபர் 23ம் திகதி வரையான காலப்பகுதியில் மனிதாபிமான விளைதிட்டத்தின் கோரிக்கைக்கு அமைய 150.092.037 டொலர்கள் அல்லது 57 சதவீதமான நிதி பாதுகாக்கப்பட்டுள்ளது.

7,194,828 டொலர்கள் வழங்கப்படவுள்ள நிலையில் மொத்த மனிதாபிமான நிதி 209,758,256 டொலர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது 2010 ஆண்டுக்கான மனிதாபிமான நிகழ்சித்திட்டங்கள் தொடர்பில் முகவர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் குடியமர்த்தல் திட்டங்களுக்காகவும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 7 அக்டோபர், 2009

இடம்பெயர்ந்தோரை பருவப்பெயர்ச்சி மழைக்கு முன் வேறு இடங்களிற்கு மாற்ற வேண்டும்-ஐ.நா


பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியா மெனிக்பாம் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரை வேறும் இடங்களில் தங்க வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், முகாம் வாழ் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் வடிகாலமைப்பு முறையின் காரணமாக முகாம்களில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இடம்பெயர் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தினயும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 5 அக்டோபர், 2009

ஐநா பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் :நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் இம்மாதக் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை என பாதுகாப்புப் பேரவையின் தலைவர் லீ லொங் மின் தெரிவித்துள்ளார்.

இலங்கை, மியன்மார் மற்றும் ஹொண்டுராஸ் விவகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை நிகழ்ச்சி நிரல் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

வியாழன், 1 அக்டோபர், 2009

போர்ச் சூழலில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க விசேட பிரதிநிதி : ஐ.நா.சபையில் தீர்மானம்
இலங்கை உட்பட்ட நாடுகளில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இவை இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க, ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குப் பலியாகியுள்ளனர்.
சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் பெணகள் தொடர்பான இந்தப் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஓரு ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அணு ஆயுதமற்ற உலகை கட்டியெழுப்புவது தொடர்பான முக்கியத்துவமிக்க தீர்மானம் - ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நிறைவேற்றம்

அணு ஆயுதமற்ற உலகை கட்டியெழுப்புவது தொடர்பான முக்கியத்துவமிக்க தீர்மானம் - ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நிறைவேற்றம்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்ற உச்சிமாநாட்டில் அணு ஆயுதமற்ற உலகைக் கட்டியெழுப்புவது தொடர்பான தீர்வுத் திட்டமொன்றுக்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அணு ஆயுத பரவலாக்கத்திற்கு முடிவு கட்ட அழைப்பு விடுத்த இந்தத் தீர்வுத் திட்டத்தில், அணு ஆயுத அச்சுறுத்தல் மிக்க நாடுகள் என மேற்குலக நாடுகளால் வர்ணிக்கப்படும் ஈரான் வட கொரியா என்பன தொடர்பில் குறிப்பிட்டு எதுவும் கூறப்படவில்லை.

மான்ஹதனிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற இரு மணித்தியால கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அனைத்து நாடுகளதும் மக்களினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள அணு ஆயுத பரவலாக்கம் தொடர்பில் நாம் கவனமெடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்ற பின் கலந்து கொள்ளும் முதலாவது ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் இதுவாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உள்பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் அணு குண்டுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அணு ஆயுத பரவலாக்க தடைச் சட்டத்தில் இதுவரை கைச்சாத்திடாத அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளை இலக்கு வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 15 நாடுகள் அங்கத்துவம் வகிக்கிக்கின்றன.

சனி, 19 செப்டம்பர், 2009

இடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு விரைவில் சொந்த இடங்களுக்கு திரும்ப வழி செய்ய வேண்டும்- ஐ.நா. விசேட பிரதிநிதி


நலன்புரி முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரைவிரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிசெய்ய வேண்டும். முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிபொதுச்செயலாளர் லின் பஸ்கோ தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அவரது அமைச்சில் நேற்றிரவு சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நேற்று முன்தினம் புதனன்று இலங்கை வந்த லின் பஸ்கோ நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியபகுதிகளுக்கு விஜயம்செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியிருந்தார். முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பில் உங்களது அவதானிப்பு எத்தகையது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதல்ல என்பதை உலகின் பல்வேறு முகாம்களுக்கும் சென்றவன் என்றவகையில் நான் அறிந்துள்ளளேன். முகாம்களில் வாழ்வது நல்ல உணர்வை என்றுமே தந்ததில்லை. சொந்த இடங்களை விட்டு முடக்கப்பட்ட நிலையில் முகாம்களில் வாழ்வது என்றுமே நல்ல உணர்வை தரமாட்டாது. எனவே, இயன்றவரையில் முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அரசாங்கத்திற்கு பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் உள்ளதென்பதை நான் அறிவேன். இருப்பினும் பருவமழைக்காலம் அண்மித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவற்கு அரசாங்கம் வெளியிட்ட 180 நாள் வரைவுத்திட்டத்தில் பாதிநாட்கள் கடந்து விட்ட நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பான உங்கள் மதிப்பீடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லின் பஸ்கோ, என்னுடைய மதிப்பீடு முடிவடையும் வரையில் நான் இதுதொடர்பில் கருத்து கூறுவதற்கு காத்திருக்க வேண்டும்.

முன்னதாக ஐக்கியநாடுகள் பிரதிச்செயலாளருடனான சந்திப்பையடுத்து ஊடகவிலாளர்கள் மத்தியில் பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, எவ்வளவு விரைவாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற முடியும். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என இதன்போதுஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் திட்டத்தில் தற்போது 90 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய நாட்கள் முடிவதற்குள்ள இடம்பெயர்ந்த மக்களில் கணிசமான தொகையானோர் மீளக்குடியமர்த்தப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இடம்பெர்யர்ந்த மக்களின் சுகாதரம், கல்வி போன்றவிடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

உலகம் முழுவதும் 100 கோடிபேர் பட்டினி கிடக்கும் நிலை : ஐ.நா. கவலை


உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை.
இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,
மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது.
இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

வியாழன், 17 செப்டம்பர், 2009

வவுனியா முகாம்களுக்கு லின் பாஸ்கோ விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை சென்றுள்ள ஐ நாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ இன்று வடக்கேயுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள முகாம்களின் நிலமைகளை அவர் நேரில் கண்டறிந்துள்ளார்.
நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும், பாடசாலைகள் மற்றும் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்துவதன் மூலம் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாக லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.
தான் சந்தித்த மக்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு செல்லவே விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அப்படி செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே தங்களது எதிர்காலம் குறித்த கவலை காணப்படுவதாகவும் அவர்கள் பொறுமையிழந்து வருகிறார்கள் என்றும் லின்பாஸ்கோ கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தமான நிலையில் இருப்பதன் காரணமாக ஐ நா ஏமாற்றம் அடைந்திருப்பதாலேயே அவர் அங்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

திங்கள், 14 செப்டம்பர், 2009

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசிடம் ஐ.நா. விளக்கம் கோரல்

வன்னி யுத்தத்தில் ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் - மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஊடகங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறீலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை விளக்கம் கோரியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை எதிர்கொள்ளும் நிமித்தம் ஜெனீவாவிற்கு மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும், இலண்டனுக்கு பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கவையும், நியூயோர்க்கிற்கு கலாநிதி பாலித்த கோஹொன்னவையும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்திருப்பதாக இராசதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சனிக்கிழமை ஜெனீவாவிற்குப் பயணமாகிய சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இதுவிடயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மார்டின் யூகொமொய்பி, அகதிகளுக்கான உயர் ஆணையாளர் ஜோஸ் லூயிஸ் குற்றாறெஸ் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நிகழ்த்துவார் எனத் தெரிய வருகின்றதுஇதேபோன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் செயலாளர் நாயகம் உட்பட மூத்த அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நிகழ்த்துவதற்கு கலாநிதி பாலித்த கோஹொன்ன திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.இதனிடையே, கடந்த வியாழக்கிழமை (10.09.2009) முதல் இலண்டனில் தங்கியிருக்கும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், ஊடகவியலாளர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பரப்புரைச் சந்திப்புக்களை நிகழ்த்தி வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.