வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ்க் கைதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்க் கைதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஜனவரி, 2010

தமிழ்க் கைதிகளை விடுவிக்கக் கோரி வெலிக்கடையில் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம்


பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் இன்று வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பட்டமொன்றை நடத்தினர்.

மனித உரிமைகள் இல்லம், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் கண்காணிப்புக் குழு, ஐக்கிய சோஷலிசக் கட்சி போன்றவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

கைதிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி தமது உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்து காலம் தாழ்த்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

அதேவேளை, தமது விடுதலை தொடர்பிலும், விசாரணைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் கனகசபை தேவதாஸ்(வயது 53), இம்மாதம் முதலாம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது மனைவி எமக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறைச்சாலை உதவி ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவுடன் தொடர்பு கொள்ள முற்பட்டபோது, அவர் அங்கு இல்லையென எமக்குத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதன், 23 டிசம்பர், 2009

தமிழ்க் கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை


வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம், மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்தப் பின்னணியில், நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைகளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்க, கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

திங்கள், 28 செப்டம்பர், 2009

வி்டுதலை வேண்டி அ'புரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம்


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இவர்கள் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தண்ணீர் மாத்திரம் அருந்தி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் நீதி அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் உறுதிமொழி வழங்கும் வரையில் தமது உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் தலைவர்களாக இருக்கின்றார்கள். பல முன்னணி தலைவர்கள் இன்று அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர் விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தங்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்து அவர்கள் பெரிதும் விசனம் தெரிவித்திருப்பதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் 43 பேருக்கு ஆதரவாக மகசின், பூஸா, வெலிக்கடை உட்பட ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது