
இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள ஏனைய மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதுடன், முகாம்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷவை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட குழுவினரே பஷில் ராஜபக்ஷ எம்.பி.யைச் சந்தித்து இதனை வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் தரப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இச் சந்திப்பு தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பி. மாவை. சேனாதிராஜா கருத்து வெளி யி டு கையில், இடம்பெயர்ந்த மக்களின் நிலைவரம் தொடர்பிலான இச்சந்திப்பில், முகாம்களில் எஞ்சியிருக்கின்றவர்களினதும் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறு நாம் வலியுறுத்தியுள்ளோம். வன்னியைச் சேர்ந்த 44 ஆயிரம் பேரும், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 41 ஆயிரம் பேருமாக மொத்தம் 85 ஆயிரம் மக்கள் இதுவரையில் வடக்கில் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொகை உட்பட மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமக்குக் கூறப்பட்டது.
கண்ணிவெடி அபாயம் இல்லாத பகுதிகளில் எஞ்சியிருப்பவர்களை குடிமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்திக் கூறியதையடுத்து, அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படாதிருப்பதையும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம் என்றார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவையும் நேற்று சந்தித்துள்ளனர். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. அதேபோல், முகாம்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு புனர்வாழ்வளிப்பதாகக் கூறப்படுகின்றவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் அவர்களது தற்போதைய நிலைமை தொடர்பிலும் விபரங்களை வெளியிடுமாறும் தாம் கோரிக்கை விடுத்ததாக மாவை எம்.பி. தெரிவித்தார்.
அத்துடன், முகாம்களில் இருக்கின்ற சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் அவர்களது கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் குறித்து அமைச்சர் மிலிந்த மொறகொடவின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் தகவல் தருகையில்,
எவ்வித விசாரணைகளும் இன்றி சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், அத்துடன் குற்றவாளிகள் அல்லாத பட்சத்தில் அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் கேட்டுக் கொண்டோம்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மிலிந்த மொறகொட, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து அவர்களது விடயத்தில் துரித நடவடிக்கைகளை எடுப்பதாகவும், குற்றமற்றவர்கள் எனும் பட்சத்தில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இது எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என்றும் உறுதியளித்தõர் என்றார். இதேவேளை, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் மிலிந்த மொறகொடவை மீண்டும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’